22 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 22 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 22 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
வாகனங்கள்
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தளர்வு இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொள்ளாச்சியில் காய்கறி, மளிகை கடை கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
பொது மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடங்கியது.
இதை ஆணையாளர் காந்திராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வருவாய் ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
முகக்கவசம் கட்டாயம்
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் 22 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்ய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும். உழவர் சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலை அடிப்படையில் காய்கறிகள் விற்பனை செய்யப் படும்.
காய்கறிகள் விலை
அதன்படி தக்காளி கிலோ ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.55-க்கும், புடலை ரூ.25-க்கும், பாகற்காய் ரூ.45-க்கும், அரசாணி ரூ.15-க்கும், சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், முருங்கைகாய் ரூ.60-க்கும், தேங்காய் ரூ.35-க்கும், உருளை கிழங்கு ரூ.40-க்கும், கேரட் ரூ.65-க்கும், பீட்ரூட் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று தினமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்படும். காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க 2 வார்டுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் அடிக்கடி காய்கறிகள் விலை குறித்து ஆய்வு செய்வார்கள். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.