ஊரடங்கு உத்தரவை மீறியதாக பெங்களூருவில் 1,488 வாகனங்கள் பறிமுதல் 186 பேர் கைது
பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,488 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை பிடிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய சாலைகளில் தேவையில்லாமல் சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்ததுடன், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தார்கள். மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களையும் போலீசார் கைது செய்தனர். காலை 10 மணிக்கு பின்பு வாகன ஓட்டிகள் பல்வேறு காரணங்களை கூறி சுற்றி திரிந்தனர்.
அதன்படி, சிட்டி மார்க்கெட் அருகே காரில் வந்த ஒரு பெண், பி.பி.எல். ரேசன் கார்டை போலீசாரிடம் காட்டி, ரேசன் பொருட்களை வாங்க செல்வதாக கூறினார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் ரேசன் பொருட்கள் வாங்க செல்லவில்லை என்பது தெரியவந்ததும், அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல், வாலிபர்கள் பல்வேறு காரணங்களை கூறி போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனாலும் அவர்களது இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
கலாசி பாளையம் அருகே சொகுசு காரில் வந்த 2 பேர், தடுப்பூசி போட செல்வதாகவும், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் போலீசாரிடம் தவறான தகவல்களை கூறினார்கள். போலீசாருடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்ததுடன், சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் 1,488 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தாா்கள். அவற்றில் 1,308 இருசக்கர வாகனங்கள் ஆகும்.
மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின்படி 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை போலீசார் கைது செய்யாமல் இருந்தனர். ஆனால் நேற்று 186 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.