233 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி-பழங்கள் விற்பனை

ஊரடங்கிலும் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு 233 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-24 15:53 GMT
திண்டுக்கல்: 

வாகனங்களில் காய்கறி விற்பனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. 

இந்த முழுஊரடங்கு ஒரு வாரத்துக்கு அமலில் இருக்கும். இதனால் ஊரடங்கு காலத்தில் மளிகை, காய்கறி கடை உள்பட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டன.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் நடைபெற்றது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு கொடியசைத்து நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார். 

இதில், கலெக்டர் விஜயலட்சுமி, வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:- 

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை வணிகம், கூட்டுறவு ஆகிய துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 233 நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

 மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வசிப்பிடத்துக்கே சென்று தரமான காய்கறிகள், நியாயமான விலையில் விற்கப்படும். அதோடு தேவைக்கேற்ப கூடுதல் வாகனங்களில் காய்கறி விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

மேலும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேநேரம் பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். 

எனவே, கொரோனா பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்க வேண்டும். 


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்