தேனி மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்: கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடின
தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.;
தேனி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து தேனி மாவட்டம் முழுவதும் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
சாலைகள் வெறிச்சோடின
தேனி நகரில் குறைந்த எண்ணிக்கையில் ஓட்டல்கள், மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. மற்றபடி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. வங்கிகள் காலை நேரத்தில் மட்டும் செயல்பட்டன. வங்கிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால், பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வாகனங்களில் மக்கள் சென்றனர். அவர்களையும் போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.
வாகன தணிக்கை
முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் நோக்கில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கேரள மாநில எல்லை பகுதிகளான கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி மலைப்பாதைகளிலும், திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் மாவட்டத்தில் 42 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
'இ-பதிவு' செய்யாமலும், ஊரடங்கு விதியை மீறியும் வெளியே உலா வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம்
பெரியகுளத்தில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மூன்றாந்தல், புதிய பஸ் நிலைய பிரிவு, தாமரைக்குளம், வடுகப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் ஆகியோர் ஊரடங்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைந்து காணப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக பெரியகுளம் நகராட்சி மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 3 வாகனங்களில் காய்கறியும், ஒரு வாகனத்தில் மளிகை பொருட்களும் பெரியகுளம் நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் போலீசார், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
போடி
போடியில், நகர எல்லையான சாலை காளியம்மன் கோவில் பகுதி, ரெங்கநாதபுரம் பகுதியில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது இ-பதிவு இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பினர். மேலும் தேவையில்லாமல் ஊருக்குள் சுற்றிய வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். நகரின் முக்கிய பகுதிகளான காமராஜர் சாலை, தேவர் சிலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை, கட்டபொம்மன் சிலை, பழைய பஸ் நிலையம், போஜன் பார்க் பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்தனர். போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.