தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்தித்துறை சென்னை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சென்னை முதன்மை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு பணிகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமிநாசினி தெளித்தல், கிராமப்புற பகுதிகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், இரட்டை மாஸ்க் அணிதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் மற்றம் உள்ளுர் விவசாயிகளிடம் இருந்து காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை கொள்முதல் செய்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிட ஏதுவாக நடமாடும் காய்கறி அங்காடியை கிராம பகுதிகளில் உள்ள சுயஉதவி குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கூடுதல் இயக்குனர் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வு
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை பொறியாளர் குற்றாலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெற்கு சிலுக்கன்பட்டி, மேல கூட்டுடன்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கானொலி காட்சி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சங்கரஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுரேஷ் மற்றும் உதவி பொறியாளர் தளவாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.