கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3,944 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிய உச்சம்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இருப்பினும் பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் உயிரிழப்பும் முன் எப்போதும் இல்லா வகையில் அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது.
21 பேர் பலி
இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 5 பெண்கள், 1 ஆண், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1 பெண், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள், 10 ஆண்கள் என 21 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,454 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 263 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 31 ஆயிரத்து 578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.