பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப கேட்டு 2-வது நாளாக வாகன ஓட்டிகள் சாலை மறியல்
திருவொற்றியூரில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப தரக்கோரி வாகன ஓட்டிகள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் பறிமுதல்
திருவொற்றியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த 227 ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், கடந்த 2 நாட்கள் அனைத்து வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்பட்டது.இந்தநிலையில் முழு ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் இருக்கும் உதிரி பாகங்கள் தவறிடகூடும், மேலும் உரிய இ-பதிவு முறையுடன் இயங்கிய ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறி பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் இரவு 150-க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைய செய்தனர்.
2-வது நாளாக...
இந்தநிலையில் தங்கள் வாகனங்களை திருப்பி கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள், 2-வது நாளாக நேற்று இரவு மீண்டும் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.