இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு; நெல்லை பஸ்நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
இன்று முதல் முழு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு நேற்று நெல்லை பஸ்நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
நெல்லை, மே:
இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு நேற்று நெல்லை பஸ்நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி இருப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கடந்த 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவும், நேற்றும் பஸ்கள் இயக்கப்பட்டன.நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை, தென்காசியில் இருந்து நீண்ட தூரத்துக்கு 40 அரசு விரைவு பஸ்கள், மற்ற ஊர்களுக்கு 600 புறநகர் பஸ்கள், டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
பயணிகள் கூட்டம்
நேற்று முன்தினம் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பஸ்களில் புறப்பட்டவர்கள் நெல்லை தற்காலிக பஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்து சேர்ந்தனர். அவர்கள் அங்கு இறங்கி வேறு பஸ்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதேபோல் நேற்று பகல் நேர பஸ்களில் பலரும் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதனால் பஸ்களில் சமூக இடைவெளி இன்றி வழக்கம் போல் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர். இருந்த போதிலும் அவர்களை டிரைவர், கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பயணம் செய்ய அறிவுறுத்தினார்கள்.
நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள 2 தற்காலிக பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் குவிந்ததையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.