முழு ஊரடங்கு அறிவிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிப்பால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாததால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முழு ஊரடங்கின்போது மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்காது. மருந்து கடைகள், பால் கடைகள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் சிரமப்பட கூடாது என்பதற்காக நேற்று முன்தினம் மற்றும் நேற்று அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதித்தது.
இதையொட்டி நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரியில் சேலம் சாலை, சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள்மற்றும் இதர பொருட்களை வாங்கி சென்றார்கள். அதே போல இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் வெளியூர்களுக்கு நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் ஏராளமான பொதுமக்கள் சென்றனர்.
ஓசூரில் நேற்று காலை முதலே கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஓசூர் காமராஜ் காலனி, ராமநாயக்கன் ஏரிக்கரை மற்றும் முனீஸ்வரர் நகர் பகுதியிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை மக்கள் வாங்கினர். இதேபோல் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு தாலுகா அலுவலக சாலை, பாகலூர் ரோடு ஆகிய இடங்களில் உள்ள மளிகை கடைகள் பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இருசக்கர வாகனங்களில் வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள், தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பயணம் செய்தனர். இதனால் ஓசூர் பஸ் நிலையத்தில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.