முழு ஊரடங்கு எதிரொலி: திருச்சியில் காய்கறிகள் விலை பலமடங்கு உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி

ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு எதிரொலியாக திருச்சியில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2021-05-23 20:13 GMT
திருச்சி,
ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு எதிரொலியாக திருச்சியில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையாக பரவிவருகிறது. அதை கட்டுக்குள் கொண்டுவர இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி வழக்கமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் மளிகை கடைகள் கூட இயங்காது என்பதால் திருச்சியில் காய்கறிகள் வாங்க நேற்று காலை முதலே ஏராளமான மக்கள் மார்க்கெட்டுக்கு படையெடுக்க தொடங்கினர். ஆனால் நேற்று முன்தினத்தை ஒப்பிடும்போது நேற்று காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது. 

பொதுமக்கள் அதிர்ச்சி

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி காந்திமார்க்கெட் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மேலரண்சாலை தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. இதை கண்டு அதிகப்படியான மக்கள் தாங்கள் வாங்க வந்த அளவைவிட குறைவாக வாங்கி சென்றனர்.

ஒரு சிலர் அதிக விலை கொடுத்து வாங்க மனமில்லாமல் திரும்பிச்சென்றனர். முழு ஊரடங்கை பயன்படுத்தி செயற்கையாக காய்கறிகளின் விலை ஏற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். 

பல மடங்கு உயர்வு

கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்திருந்த காய்கறிகள் நேற்று 3 முதல் 5 மடங்கு விலை உயர்ந்து விற்கப்பட்டது. 3 கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று 1 கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ ரூ.30-க்கு விற்ற கத்திரிக்காய் நேற்று ரூ.100-க்கு விற்கப்பட்டது. 

இதுபோல் கேரட் ரூ.80-க்கும், பீன்ஸ் ரூ.120 முதல் ரூ.140-க்கும் விற்பனையானது. இதேபோல் காலிபிளவர், பீட்ரூட், முருங்கைக்காய் என அனைத்து வகையான காய்கறிகளுமே பல மடங்கு விலை உயர்ந்து விற்கப்பட்டது. மேலரண்சாலையிலுள்ள தற்காலிக மார்க்கெட் தவிர, மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்பட்ட பிற மார்க்கெட்டுகளில் காய்கறிகள் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

பண்டிகை காலம் போல் விற்பனை

இதுகுறித்து காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், “பொது முடக்கம் காரணமாக ஒரு வாரத்துக்கு காய்கறிகள் கிடைக்குமோ? கிடைக்காதோ? எனத்தெரியவில்லை. அதனால் ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்லலாம் என வந்தால் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திலும் பண்டிகை காலத்தை போல காய்கறிகளின் திடீர் விலையேற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினர்.

மீன், கோழி, ஆட்டு இறைச்சி விலையும் உயர்வு

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை பயன்படுத்தி காய்கறிகள் விலை உயர்த்தப்பட்டதை போல் நேற்று மீன், கோழி, ஆட்டு இறைச்சி  விலையும் உயர்த்தி விற்கப்பட்டது. திருச்சி உறையூர் காசி விளங்கி பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட் 10 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் சில்லறை வியாபாரிகள் மட்டும் மீன்களை விற்பனை செய்தனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதாலும், மீன்களின் வரத்து குறைந்து இருந்த காரணத்தாலும் மீன்களின் விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. இதேபோல் கிலோ ரூ.120 விற்கப்பட்ட கோழி இறைச்சி நேற்று ரூ.160-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி ரூ.950 முதல் ரூ.1000-க்கு விற்கப்பட்டது.

மேலும் செய்திகள்