காய்கறிகள் பல மடங்கு விலை உயர்வு

முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதை தொடர்ந்து, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் விலை பலமடங்கு உயர்ந்து விற்பனையானது

Update: 2021-05-23 20:07 GMT
மதுரை
முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதை தொடர்ந்து, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் விலை பலமடங்கு உயர்ந்து விற்பனையானது.
கொரோனா ஊரடங்கு
மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. குறிப்பாக காய்கறி, பலசரக்கு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அதாவது, இன்னும் ஒரு வார காலத்துக்குள் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் அளவுக்கு சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் முண்டியடித்து மார்க்கெட்டில் திரிந்தனர்.
இது ஒருபுறமிருக்க மொத்த விலை கடைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அனைத்திலும் பொதுமக்களின் கூட்ட நெரிசல் காணப்பட்டது. உள்ளூர், வெளியூர் பஸ்களிலும் பயணிகளின் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படும் என்று மட்டும் அரசு அறிவித்தது. ஆனால், ஏற்கனவே உள்ள விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு நேற்று பஸ்களில் பொதுமக்கள் கூட்டமாக பயணம் செய்தனர். இது நோய்த்தொற்று பரவலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வு
இந்தநிலையில் காய்கறி கடைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் 2 மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான கடைகள் நேற்று மதியம் 2 மணிக்கு பொருள்கள் இன்றி அடைக்கப்பட்டன. மாட்டுத்தாவணி, பரவை, கீழமாசிவீதி பகுதிகளில் திருவிழா கூட்டம் போல காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மனித தலைகள் மட்டும் தெரிந்தன.
மேலும், குண்டூசி கீழே விழும் அளவுக்கு கூட இடைவெளி இல்லை. மதுரை வெங்காய மார்க்கெட்டில், மொத்த விலையில் நேற்று முன்தினம் கிலோ ரூ.40-க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று ரூ.50-க்கு விற்றது., கிலோ ரூ.30-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.35-க்கும் விற்பனையானது.
சில்லறை விலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.50 வரையிலும் விற்பனையானது. வெள்ளை பூண்டு விலை மாற்றமின்றி சில்லறை விலையில் கிலோ ரூ.200-க்கும், இஞ்சி கிலோ ரூ.60-க்கும் விற்றது.
தக்காளி
ஆனால், மார்க்கெட் அல்லாத வேறு பகுதிகளில் மேற்கண்ட பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. காய்கறிகளை பொறுத்தமட்டில், மொத்த மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி நேற்று முன்தினம் ரூ.150-க்கு விற்பனையானது. நேற்று அதே பெட்டி ரூ.700 வரை விற்பனையானது. சில்லறை விலையில் 1 கிலோ தக்காளி ரூ.110 வரை மார்க்கெட் பகுதிகளில் விற்பனையானது. 
கடந்த சில நாட்களாக விலை கிடைக்காமல் தக்காளி கீழே கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்ற தக்காளி விலை தமிழகத்தில் உயரப்பறந்தது. பிற காய்கறிகளை பொறுத்தமட்டில், கிலோவுக்கு ரூ.10 வரை விலை உயர்ந்து விற்பனையானது. 
கத்தரிக்காய கிலோ ரூ.10-க்கும் விற்பனையானது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-க்கும் விற்றது.

மேலும் செய்திகள்