தாயில்பட்டி பகுதியில் காய்கறி தட்டுப்பாடு
தாயில்பட்டி பகுதியில் காய்கறி தட்டுப்பாடினால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதியில் காய்கறி தட்டுப்பாடினால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
முழு ஊரடங்கு
லட்சுமியாபுரம், எட்டக்காபட்டி, எதிர் கோட்டை, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், வெற்றிலையூரணி, சல்வார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு காய்கறிகளுக்கு விலை இல்லாததால் காய்கறிகள் பறிக்கப்படாமலே செடிகளில் வீணாகிக் கொண்டிருந்தது.
இந்தநிலையில் 2 நாட்கள் தமிழக அரசு முழு ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவித்தது. இதையடுத்து நேற்று காய்கறி கடையில் பொதுமக்கள் அலை மோதினர்.
விற்று தீர்ந்தன
அதிலும் குறிப்பாக ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் 3 மணி நேரத்தில் காய்கறிகள் முழுமையாக விற்று தீர்ந்தது.
காய்கறியின் விலையும் பல மடங்கு உயர்ந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் ஒருவார ஊரடங்கு என்பதால் காய்கறிகளை அதிக அளவு வாங்கி சென்றனர்.
கிலோ ரூ.20-க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.100-க்கும், தக்காளி கிலோ ரூ. 10-ல் ரூ.50-க்கும், மிளகாய் கிலோ ரூ.10-ல் இருந்து ரூ. 30-க்கும் விற்பனை ஆனது.
பொதுமக்கள் அவதி
அதேபோல உருளைக்கிழங்கு ரூ.25-ல் இருந்து ரூ.50 ஆகவும், வெண்டைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆகவும், கேரட் ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.100-க்கும் விற்பனை ஆனது.
பேரம் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாததால் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். திடீரென காய்கறிகள் விலை உயர்ந்தாலும், தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.