நாமக்கல் மாவட்டத்தில் 60 புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன; பயணிகள் இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடியது
நாமக்கல் மாவட்டத்தில் 60 புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன.
நாமக்கல்:
கொரோனா பரவலை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப புறநகர் பஸ்களை மட்டும் இயக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி நேற்று முன்தினம் மாலை முதல் நாமக்கல் மாவட்டத்தில் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன.
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, துறையூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் பயணிகள் மிக குறைவான அளவே பயணம் செய்ததை பார்க்க முடிந்தது. பயணிகளின் வருகை குறைவால் பஸ்நிலையம் வெறிச்சோடியே காணப்பட்டது. நாமக்கல்லில் இருந்து சேலத்திற்கு அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக 4 பணிமனைகளிலும் இருந்து மொத்தம் 60 புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் நாமக்கல்லுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தனர். இதுவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.