சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்: திருச்செங்கோட்டில் 5 கடைகளுக்கு ‘சீல்’; வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருச்செங்கோட்டில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.

Update: 2021-05-23 18:33 GMT
எலச்சிபாளையம்:
இன்று முதல் முழு ஊரடங்கு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
முழு ஊரடங்கில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படாது எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று, நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் வெளியூர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக பஸ்களும் இயக்கப்பட்டன.
சமூக இடைவெளியின்றி...
இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு என்பதாலும், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதாலும் நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மற்றும் இறைச்சி, ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றதை காணமுடிந்தது.
ஒரே நேரத்தில் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறியதால் அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. பொதுமக்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் கடைகளில் குவிந்தனர். மேலும் கடைக்காரர்களும் கொரோனா தடுப்பு விதிகளை மீறி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
5 கடைகளுக்கு சீல்
திருச்செங்கோடு பகுதியில் காய்கறி மார்க்கெட், மளிகை, இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளுக்கு சென்று கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். 
அப்போது, பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறி சமூக இடைவெளியின்றி தொடர்ந்து வியாபாரம் நடந்த 2 ஜவுளி கடைகள், மளிகை கடை, அழகு நிலையம், பாத்திர கடை ஆகிய 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், சில கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து போலீசார் இரவு வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்