கரூர் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து; பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன்

கரூர் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2021-05-23 18:17 GMT
கரூர்
மாரியம்மன் கோவில்
கரூர் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மே மாதத்தில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி காப்புகட்டுதல் தொடங்கி கம்பம் எடுத்து வந்து நடுதல், அக்கினி சட்டி எடுத்தல், அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். 
கடைசி 3 நாட்கள் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். கோவில் திருவிழாவின் இறுதி நாள் கம்பம் அமராவதி ஆற்றுக்கு எடுத்து சென்று விடும் நிகழ்வு அன்று மாவட்டம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பம் விடும் நிகழ்வை கண்டு களித்து அம்மன் அருள் பெற்று செல்வது வழக்கம். 
திருவிழா ரத்து
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்தாண்டும் திருவிழா நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். 
இந்தநிலையில் இந்தாண்டும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் திருவிழா ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. 
மொட்டை அடித்தனர்
இதனால் கோவிலில் மே மாதம் நடைபெறும் எந்த சித்திரை திருவிழாவும் நடைபெறவில்லை. இருப்பினும் பக்தர்கள் சிலர் கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் கரையில் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.பின்னர் புத்தாடை அணிவித்து கோவிலுக்கு சென்று வாயில் முன்பு தேங்காய், பழம் வைத்து சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்