காரணமின்றி சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

ஊரடங்கு காலத்தில் காரணமின்றி சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-23 18:15 GMT
ராணிப்பேட்டை

 ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூத்த குடிமக்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 235 மூத்த குடிமக்கள் வசிக்கின்ற வீடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ரோந்து காவலர்கள் தினமும் அங்கு சென்று வருகிறார்கள். இதற்காக அவர்கள் தங்கும் இடங்களில் பட்டா புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு, பாதுகாப்பு, அறிவுரை ஆகியவற்றை காவல்துறையினர் வழங்க உள்ளனர்.

 இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 9498180972 என்ற வாட்ஸ் அப் எண் தொடங்கப்பட்டு இருக்கிறது.

வாகனங்கள் பறிமுதல்

மேலும் இன்று முதல் தொடங்கவுள்ள முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகளை வீடு தேடி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே தகுந்த காரணங்கள் இன்றி சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். விதிமுறைகளை மீறி வருகிற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

தகுந்த காரணங்களோடு வெளியே வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் வேலைகளை முடித்துவிட்டு உடனடியாக வீடுகளுக்கு திரும்ப வேண்டும். முழு ஊரடங்கை தாங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடந்த 10-ந் தேதி முதல் விதிமுறைகளை மீறியதாக 2,332 வழக்குகள் போடப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 612 இருசக்கர வாகனங்களும், இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும் என மொத்தம் 617 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்