வேறொருவருடன் கணவருக்கு கள்ளக்காதல்: 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு பெண் தற்கொலை திட்டக்குடி அருகே பரிதாபம்

திட்டக்குடி அருகே கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-23 18:15 GMT
ராமநத்தம்,


திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் ராஜன் (வயது 35). கொத்தனார். 
இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்திலேஷ் (4) என்ற மகன் உள்ளான்.

கள்ளத்தொடர்பு

இந்த நிலையில் ராஜனுக்கு ராமநத்தத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த முத்துலட்சுமி கணவரிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். 

ஆனால் ராஜன் கேட்காமல், தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்தார். இதனால் கடந்த 7 மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந்தேதி இரவும் அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துலட்சுமி மனமுடைந்து காணப்பட்டார். 

குழந்தைக்கு விஷம் கொடுத்தார்
 
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று முன்தினம் காலையில் அரளி விதையை(விஷம்) அரைத்து முத்துலட்சுமி குடித்தார். பின்னர் அதை தனது 4 வயது குழந்தைக்கும் கொடுத்தார். தாய் கொடுத்தது விஷம் என்று அறியாத அந்த குழந்தையும் அதை குடித்தது. 

பின்னர் முத்துலட்சுமி, தனது தம்பி சண்முகத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் நடந்த பிரச்சினை குறித்தும், குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்து விட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். 

பெண் சாவு

இதனால் பதறியடித்துக்கொண்டு சண்முகம், ராமநத்தத்துக்கு விரைந்து வந்து தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை நித்திலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து முத்துலட்சுமியின் தந்தை முருகேசன்(54) ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்