மீன்கள் வாங்க குளச்சல் துறைமுகத்தில் குவிந்த மக்கள்

குளச்சலில் மீனவர் வலையில் கணவாய், நவரை மீன்கள் ஏராளம் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.

Update: 2021-05-23 18:09 GMT
குளச்சல்:
குளச்சலில் மீனவர் வலையில் கணவாய், நவரை மீன்கள் ஏராளம் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.
விசைப்படகு மீனவர்கள்...
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் மீன்பிடித்தொழிலில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நேற்றிரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி யளித்தது. இதையடுத்து குளச்சல் மீன்சந்தைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் படையெடுத்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் துறைமுக ஏலக்கூடத்தில் இறக்கி விற்பனை செய்யப்பட்டது.
கணவாய் கிலோ ரூ.300-க்கு விற்பனை
பெரும்பான்மையான விசைப்படகுகளில் கணவாய், நவரை, கொழிச்சாளை போன்ற மீன்கள் கிடைத்தன. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொழிச்சாளை மீன் ரூ.3,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விலை போனது. கணவாய் மீன் கிலோ ஒன்றுக்கு ரூ.300 வரை விலை போனது. 
மீன்கள் வாங்க வியாபாரிகளுடன் பொதுமக்களும் துறைமுகத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி துறைமுகப்பகுதியில் சென்று மக்கள் கூட்டம் கூடுவதை ஒழுங்கு படுத்தினார். அவர் பொதுமக்களிடம், அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்