குமரியில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக குழித்துறையில் 105 மி.மீ. மழை பதிவானது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-23 18:04 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக குழித்துறையில் 105 மி.மீ. மழை பதிவானது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று காலையில் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதால் மக்கள் நேற்று கடை வீதிகளில் குவிந்தனர். அந்த சமயத்தில் மழை பெய்ததால் குடை பிடித்தபடி நடமாடினர்.
நீர்வரத்து அதிகரிப்பு
மலையோர பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 647 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று வினாடிக்கு 1,929 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 43.16 அடியாக இருந்தது. அது நேற்று காலை 43.76 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணையில் இருந்து பாசன கால்வாயில் 475 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதே போல நேற்று முன்தினம் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து 843 கன அடியாக அதிகரித்ததால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து 65.40 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 13.9 அடியாக இருந்தது. அது நேற்று 14.27 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 380 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 13.18 அடி ஆக இருந்தது. அது நேற்று 14.36 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 40 கனஅடியும், முக்கடல் அணைக்கு 9 கனஅடியும் தண்ணீர் வருகிறது.
உபரி நீர் திறப்பு
பேச்சிப்பாறை அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதால் அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து 1,281 கனஅடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குழித்துறை சப்பாத்து தடுப்பணை நிரம்பி பாய்கிறது. ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு முன்னதாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
கரையோர பகுதிகளில் உள்ள வயல் வெளிகள், தென்னந்தோப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் பழையாறு மற்றும் வாய்க்காலிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை அளவு
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 105 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-52, பெருஞ்சாணி-78.2, சிற்றார் 1-68.6, சிற்றார் 2-67, களியல்-70, கன்னிமார்-37.8, மயிலாடி-70.2, கொட்டாரம்-17.2, இரணியல்-42.6, குளச்சல்-36, நாகர்கோவில்-50, பூதப்பாண்டி-28.2, சுருளோடு-28.2, ஆரல்வாய்மொழி-22, புத்தன்அணை-77.6, தக்கலை-3, அடையாமடை-59, கோழிப்போர்விளை-85, குருந்தன்கோடு-43, முள்ளங்கினாவிளை-88, பாலமோர்-31.2, முக்கடல்-35, மாம்பழத்துறையாறு-57, ஆனைகிடங்கு-44.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்