மாத்தூர் அருகே கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி; 4 பேர் படுகாயம் திருமண விழாவிற்கு சென்ற போது பரிதாபம்
மாத்தூர் அருகே கார் கவிழ்ந்து 2 பெண்கள் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆவூர்:
உறவினர் வீட்டு திருமணம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 41). இவர், அப்பகுதியில் பெயிண்ட் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று அருள்தாசின் உறவினர் திருமணம் திருச்சியில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அருள்தாஸ், அவரது மனைவி ஆரோக்கிய மலர்விழி (38), மகள்கள் டெலிசா (9), டெபேலா (6) மற்றும் அவர்களது உறவினர்களான கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்த மார்ட்டின்ராஜ் மனைவி லேனாபால் இனிகோமேரி (38), ஆலங்காபட்டி கிராமத்தை சேர்ந்த வில்சன் மனைவி சோபியா (32) ஆகிய 6 பேரும் கருக்காகாட்டிலிருந்து நேற்று காலை அருள்தாசுக்கு சொந்தமான காரில் புறப்பட்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை அருள்தாஸ் ஓட்டினார்.
சாலையில் கார் கவிழ்ந்தது
கார் காலை 10.45 மணி அளவில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் உள்ள மாத்தூர் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த பெருமாள் மகன் ராஜா (29) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேனின் பின்புற சக்கரம் திடீரென கழன்று அருள்தாஸ் ஓட்டிச் சென்ற காரை நோக்கி வந்தது.
அப்போது அதை கவனித்த அருள்தாஸ் சக்கரம், கார் மீது வந்து மோதாமல் இருப்பதற்காக திடீரென காரை வலது பக்கம் திருப்பினார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மறுபுறம் சென்று தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சரக்கு வேன் சக்கரம் கழன்றதையடுத்து டிரைவர் சரக்கு வேனை அதே இடத்தில் நிறுத்தினார்.
2 பெண்கள் பலி
இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் காருக்குள்ளேயே சிக்கி அய்யோ, அம்மா என்று அலறினர். இதைப்பார்த்த அந்த வழியே சென்றவர்களும், மாத்தூர் போலீசாரும் விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை நிமிர்த்தி காரின் உள்ளே சிக்கியவர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர்.
இதில் ஆரோக்கிய மலர்விழி, லேனாபால் இனிக்கோமேரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த அருள்தாஸ், டெலிசா, டேபேலா, சோபியா ஆகிய 4 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்தில் இறந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமண விழாவிற்கு சென்ற போது 2 பெண்கள் விபத்தில் சிக்கி இறந்து சம்பவத்தால் கடுக்காகாடு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.