பொள்ளாச்சியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
பொள்ளாச்சியில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
காய்கறி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. மேலும் ஒரு வாரத்துக்கு எவ்வித தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட தால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததுடன், காய்கறி விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
காலையில் ஒருவிலை, மதியம் ஒருவிலை, மாலையில் ஒருவிலை என்று காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கிடுகிடு உயர்வு
ஒரு வாரத்துக்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்காது என்பதால் அனைத்து காய்கறி விலைகளும் கிடுகிடுவென உயர்ந்தன. பொள்ளாச்சி பகுதியில் காலையில் பீட்ரூட் ரூ.15-க்கும், மதியம் ரூ.30-க்கும், மாலையில் ரூ.50-க்கும் விற்கப்பட்டது.
இதுபோன்றுதான் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ கத்தரி மாலையில் ரூ.100-க்கு விற்பனையானது. இதுபோன்று விலையை உயர்த்தியது ஏன் என்பது தெரியவில்லை.
நியாயம் இல்லை
இதுகுறித்து கேட்டால் காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது என்று கூறினார்கள். அப்படி என்றால் காலையில் மட்டும் விலை குறைவாக விற்க காரணம் என்ன என்பதும் புரியவில்லை.
ஊரடங்கை கருத்தில் கொண்டு இதுபோன்று விலையை உயர்த்தி விற்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மேலும் மார்க்கெட்டில் விலை குறைவாகதான் இருந்தது.
ஆனால் மளிகை கடைகளில் காய்கறிகளின் விலை அதிகமாக விற்கப்பட்டது. இவ்வாறு பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தினமும் 60 டன் காய்கறிகள் வரும். ஆனால் 25 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. இதனால் காய்கறி விலை உயர்ந்தது என்றனர்.
விலை விவரம்
மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகள் (ஒரு கிலோ, காலை மற்றும் மாலை) விவரம் வருமாறு:-
பீட்ரூட் காலை ரூ.15, மாலை ரூ.50, தக்காளி-ரூ.20, ரூ.30, பல்லாரி- ரூ.20, ரூ.35, சின்ன வெங்காயம்- ரூ.40, ரூ.60, கத்தரி-ரூ.25, ரூ.50, வெண்டைக்காய்-ரூ.60, ரூ.75, கேரட்-ரூ.30, ரூ.50, அவரைக்காய்-ரூ.25, ரூ.40, புடலங்காய்-ரூ.15, ரூ.40, பூசனிக்காய்-ரூ.15, ரூ.30, உருளைக்கிழங்கு-ரூ.25, ரூ.45.