காய்கறி மார்க்கெட் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
பொள்ளாச்சியில் பொருட்கள் வாங்க காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பொருட்கள் வாங்க காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் படி கடந்த 10-ந் தேதியில் இருந்து சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டதால், வெளியே செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
இதையடுத்து திங்கட்கிழமை முதல் ஒருவாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதி இல்லை.
மேலும் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால் காலையில் இருந்தே அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக பொள்ளாச்சியில் உள்ள கடைவீதி, மார்க்கெட், உடுமலை ரோடு, கோவை ரோடு பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதிகாரிகள் எச்சரிக்கை
இதனால் கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறந்தது. முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் குவிந்தனர்.
அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விதிகளை மீறியவர்களை கடுமையாக எச்சரித்தனர்.
மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதுபோன்று இறைச்சி கடைகள், மீன்கடை களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று இறைச்சி மற்றும் மீன்களை வாங்கி சென்றனர்.
பஸ்களில் கூட்டம்
பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, வால்பாறை, மதுரை உள்பட வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
ஆனால் வால்பாறைக்கு செல்ல மட்டும் பஸ்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறைக்கு செல்லும் பஸ், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு வந்ததும் அதில் ஏற பயணிகள் முண்டியடித்து ஓடினார்கள்.
போலீசார் வாகன தணிக்கை
மேலும் பல இடங்களில் பொதுமக்கள் அதிகமாக திரண்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறி செல்பவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.
இதேபோல், ஆனைமலை, கோட்டூர், சுல்தான்பேட்டை ஆகிய பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வால்பாறை
வால்பாறை காந்தி சிலை பஸ்நிறுத்தம், மெயின் ரோடு, நகராட்சி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காத அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் யாருமே சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கவில்லை.
மேலும் வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கட்டுப்படுத்த முயற்சி செய்தும் முடியவில்லை. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.