தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2021-05-23 16:47 GMT
திருவாரூர்:-

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். 
மாவட்ட கலெக்டர் சாந்தா, போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, நாகை எம்.பி. செல்வராசு, எம்.எல்.ஏ.க்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆக்சிஜன் இருப்பு

கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாத்திடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
அரசின் துரித நடவடிக்கையால் தமிழகத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேவையான ஆக்சிஜனும், கூடுதலாக 150 படுக்கைள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருந்துகள் கையிருப்பு

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகள் கையிருப்பில் உள்ளது. தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 140 ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு உள்ளது. 
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால் தேவையான இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். நோயாளிகளையும், மருத்துவமனைகளையும் இணைக்கும் பாலமாக தொண்டு நிறுவனங்கள், என்.எஸ்.எஸ். பிரிவினரை செயல்பட செய்ய உள்ளோம். திருச்சி துவாக்குடியில் உள்ள கம்பெனியில் இருந்து இப்பகுதிக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பற்றாக்குறை இல்லை

மத்திய அரசின் மூலம் 900 டன் ஆக்சிஜன் பெறப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் வருவதால் தற்போது தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உள்ளது. இதனால் பற்றாக்குறை என்பது இல்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மருத்துவ பணிகள் இணை இயக்குனனர் ராஜாமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா ஜோசப்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றிய குழுத்தலைவர்கள் தேவா, பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வார்டு அமைக்கும் பணி

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை கொண்ட வார்டு அமைக்கும் பணியினை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்