இலங்கை அகதிகள் முகாமில் 69 பேருக்கு கொரோனா
இலங்கை அகதிகள் முகாமில் 69 பேருக்கு கொரோனா;
தளி,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரப்பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஓரு பகுதியாக இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் உடுமலையை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 74 குடும்பங்களில் சுமார் 270 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் தளி பேரூராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல், தெருக்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.