திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் உற்சாகமாக சென்றனர்.

திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் உற்சாகமாக சென்றனர்.

Update: 2021-05-23 15:50 GMT
திருப்பூர்
திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் உற்சாகமாக சென்றனர். 
பஸ்கள் இயக்கம்
கொரோனா பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு வாரம் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்த தளர்வில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்கப்பட்டது. இதுபோல் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
 தொழிலாளர்கள்
இந்நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்தே திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் 2-வது நாளான நேற்று திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் பஸ் நிலையம், கோவில்வழி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த பஸ்களில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. பலரும் நீண்ட நேரம் காத்து நின்று காலையில் பஸ் ஏறி சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக சென்றனர். திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வரத்து ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டன.
வாக்குவாதம்
இதனால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதனால் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தபடியே சென்றன. பஸ்களில் இடம் பிடிக்கவும் பலரும் முண்டியடித்தபடி ஏறினர். இதற்கிடையே திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் பகுதியில் இருந்து சேலத்திற்கு நேற்று காலை இயக்கப்பட்ட அரசு பஸ்சில், ஈரோட்டிற்கு செல்லும் பயணிகள் ஏறக்கூடாது. திருப்பூரில் இருந்து சேலத்திற்கு செல்கிறவர்கள் மட்டுமே ஏற வேண்டும் என அந்த பஸ்சின் நடத்துநர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஈரோடு மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த பயணிகள் பலர் தங்களையும் ஏற்றி செல்ல வேண்டும். அல்லது கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என டிரைவர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஈரோட்டிற்கு சென்றவர்கள் அந்த பஸ்களில் ஏற்றி செல்லப்பபட்டனர். இதுபோல் திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு தனியார் வேன்கள் பல ஆட்களை ஏற்றி சென்றனர். இந்த வேன்களில் அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக பலர் தனியார் வேன்களில் செல்லாமல் பஸ்களுக்காக காத்திருந்தனர். இருப்பினும் பஸ் கிடைக்காத பலரும் வேறு வழியின்றி அதிகளவு கட்டணம் குடுத்து தனியார் வேன்களில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்