ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்:
டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்கப்பட்டன.
இதனையடுத்து திண்டுக்கல் நகர் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்தநிலையில் திண்டுக்கல் நகர் பகுதியில் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளை விநாயகர் கோவில் சந்திப்பு, நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர் உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு அறிவுரை
அப்போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்செல்லும்படி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் கடைக்காரர்களையும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தீவிரமாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவன பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தக்கூடாது.
இ-பதிவு கட்டாயம்
மருத்துவமனைகள், மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம். மையங்கள் தவிர மற்ற எந்த கடைகளோ, நிறுவனங்களோ செயல்படாமல் போலீசார் பார்த்துகொள்ள வேண்டும்.
மருத்துவ காரணம், இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும்.
இதனை போலீசார் சோதனை செய்த பின்னரே அவர்களை நகருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
குடிநீர், பால் வினியோகம், பத்திரிகை வினியோகம், அத்தியாவசிய பொருட்கள், வேளாண் விளை பொருட்கள் விற்பனையை தடுக்க கூடாது. சரக்கு வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, இரவு 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே உணவு பொருட்களை பார்சலில் வழங்க போலீசார் அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கை மீறி சுற்றித்திரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.