வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 259 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 259 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.

Update: 2021-05-23 15:35 GMT
பெங்களூரு, 

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி பிரதமர் மற்றும் நமது நாட்டுக்கு எதிரான கருத்துகளை "டூல்கிட்" என்ற பெயரில் தவறான தகவல்களை வெளியிட்டு அவமதித்துள்ளது. இது போலி என்று காங்கிரஸ் சொல்கிறது. அது போலி என்றால், தற்போது காங்கிரஸ் தலைவர்கள் கூறும் கருத்துகள் பொய்யானவையா?.

காங்கிரஸ் திட்டமிட்டு நாட்டுக்கும், பிரதமருக்கும் எதிராக சதி செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளது. உத்தரகாண்டில் நடைபெற்ற கும்பமேளாவை கொரோனா பரவலின் மையம் என்று கருத்துகளை வெளியிட்டுள்ளனர். சர்வதேச ஊடகங்கள் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மராட்டியம் தான் முதல் இடத்தில் உள்ளது. கேரளா 2-வது இடத்தில் இருக்கிறது. கும்பமேளாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் நடத்த பரிசோதனையில் 1,700 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா நோயாளிகள் மத்தியில் ஆதங்கத்தை உண்டாக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.

பெங்களூருவில் மருத்துவ படுக்கைகளை ஒதுக்குவதில் நடந்த முறைகேட்டிற்கும் காங்கிரஸ் தான் காரணம். பிரதமர் மோடியின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் மோடி வைரஸ், இந்திய வைரஸ் என்ற சொற்களை பரப்பியுள்ளனர். இந்த சொந்களை காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களின் டுவிட்டர் பதிவில் பயன்படுத்தி உள்ளனர்.

இவர்களுக்கு சீனா வைரஸ் என்று சொல்ல தைரியம் இல்லை. நமது நாட்டை பற்றி தவறான பிரசாரம் செய்ய முயற்சி யெ்கிறார்கள். அதனால் தான் அமித்ஷாவை காணவில்லை என்று கூறினர். மத்திய அரசு கொடுத்த வென்டிலேட்டர்களை பயன்படுத்தாமலேயே அது தரம் குறைந்தவை என்று குற்றம்சாட்டினர்.

நாட்டின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியல் முடிவுக்கு வரும். நாட்டுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்துள்ளது. அதனால் தான் மக்கள் இன்று கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். நாட்டின் விஞ்ஞானிகள், டாக்டர்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை காங்கிரசார் மோடி தடுப்பூசி என்று கிண்டல் செய்தனர்.

இப்போது அதே காங்கிரசார், மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என கூறி முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட காங்கிரசார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 259 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் அடங்கும்.

கொரோனா தடுப்பூசியை இந்தியா 95 நாடுகளுக்கு வழங்கியது. அதனால் 83 நாடுகள் நமக்கு மருத்துவ உதவிகளை செய்துள்ளன. வரும் நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டில் 19 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

மேலும் செய்திகள்