தேனியில் இருந்து கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இயக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் சமூக இடைவெளியின்றி நின்றுகொண்டே பயணம்

தேனியில் இருந்து கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இயக்காததால் பஸ்சுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சமூக இடைவெளியின்றி நின்று கொண்டே பயணம் செய்தனர்.

Update: 2021-05-23 14:38 GMT
தேனி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக பல்வேறு தளர்வுகளை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் 2 நாட்களுக்கு பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தார். அதன்படி 12 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பிற்பகலில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
2-வது நாளாக நேற்று இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் சுமார் 380 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், நேற்று 220 பஸ்கள் இயங்கின. தேனியில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், மாவட்டத்துக்குள்ளும் பஸ்கள் இயக்கப்பட்டன.
நீண்டநேரம் காத்திருப்பு
பஸ்கள் இயக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். ஆனால் அவர்கள் தேனியில் இருந்து தங்களின் கிராமப்புற பகுதிகளுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி செய்யப்படவில்லை. கிராமப்புற பகுதிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், வருசநாடு, கடமலைக்குண்டு, கண்டமனூர், மயிலாடும்பாறை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காக தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை உருவானது.
நேற்று பகல் 11 மணியளவில் வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளுக்கு செல்வதற்காக 200-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு காத்திருந்தனர். அங்கு பலர் கைக்குழந்தைகளுடனும், மருந்துகள் வாங்க வந்த முதியோர்களும் பஸ்சுக்காக காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரமாக பஸ் வராமல் காத்திருந்த நிலையில், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் அங்கு வந்தார். பின்னர் அவர் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சமூக இடைவெளியின்றி பயணம்
இதையடுத்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்களிடம் பஸ்கள் கிடைக்காதது குறித்து மக்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறினர். இருக்கைகள் நிரம்பிய நிலையிலும், சமூக இடைவெளியின்றி நின்று கொண்டும், படிக்கட்டுகளில் தொற்றிக் கொண்டும் பலர் பயணம் செய்தனர்.
அதுபோல், தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பலர் தங்களின் கிராமப்புற பகுதிகளுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை உருவானது. சமூக இடைவெளியின்றி மக்கள் காத்திருந்ததும், பஸ்களில் நெருக்கமாக நின்று பயணம் செய்ததும் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் செய்திகள்