ஏழைகளுக்கு தானம் செய்வதாக கூறி சர்க்கரை வாங்கி வியாபாரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
வியாபாரியிடம் ரூ.6.59 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரை கடந்த 20-ந் தேதி தினேஷ் ஷா என்பவர் அணுகினார். தனக்கு 20 டன் எடையுள்ள சர்க்கரை தரும்படி கேட்டு உள்ளார். அந்த சர்க்கரையை இயலாதவர்களுக்கு தானம் செய்ய இருப்பதாக கூறி, பின்னர் பணம் தருவதாக தெரிவித்தார். இதை நம்பிய வியாபாரி தினேஷ் ஷாவிற்கு சர்க்கரையை கொடுத்தார்.
பின்னர் பணத்துக்காக அவரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி சம்பவம் குறித்து மிராபயந்தர்-வசாய்விரார் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் தினேஷ் ஷா என்று அழைக்கப்படும் துஷார் லாகுர் என்பவர் தனது கூட்டாளியான மிராரோடு நயாநகரில் வசிக்கும் முகமது சையத் என்பவருடன் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முகமது சையத்தை பிடித்து கைது செய்தனர். மேலும் குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய துஷார் லாகுரை போலீசார் தேடி வருகின்றனர்.