ரூ.1 கோடி கடத்தல் மதுபானங்கள் பறிமுதல் 4 பேர் கைது

இருவேறு இடங்களில் கடத்தப்பட்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர்.

Update: 2021-05-23 13:12 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டு உள்ளது. இதில் மதுபான கடைகளும் அடங்கும். இதனால் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்க வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்கள் அதிகளவு மும்பைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவாவில் இருந்து பன்வெல் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி அதிகாரிகள் பன்வெல் அருகே வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு வந்த ஒரு வாகனத்தை மறித்து நடத்திய சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 500 பார்சல்கள் இருந்ததை கண்டனர்.

இதில் விஸ்கி, ரம் என ரூ.56 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த சங்கு மிஸ்ரா, சைலேஷ் பத்மாவத் ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர்.

இதே போல பீட்-உஸ்மானபாத் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.43 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த மகேஷ் அஜ்னரே, கானா ராதேஷியாம் ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர்.

இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதுபானங்களின் மதிப்பு ரூ.1 கோடியே 43 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்