புஞ்சைபுளியம்பட்டியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை- ஒரு தலை காதலால் விபரீத முடிவு
புஞ்சைபுளியம்பட்டியில் ஒரு தலை காதலால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் ஒரு தலை காதலால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஒரு தலைக்காதல்
புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை தேடி வந்துள்ளார். மேலும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் அவர் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஞ்சித் மட்டும் ஒரு தலையாய் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக கடந்த ஆண்டு விஷத்தை குடித்துள்ளார். அப்போது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
வாலிபர் தற்கொலை
எனினும் ரஞ்சித் தொடர்ந்து அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மன வேதனையடைந்த ரஞ்சித் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று காலை இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.