ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் 6 ஆயிரம் பேர் வீட்டு தனிமை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் 6 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் புதிய உச்சமாக 1,500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் நிலவரப்படி மொத்தம் 40 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில், 30 ஆயிரத்து 306 பேர் குணமடைந்து உள்ளனர். 226 பேர் உயிரிழந்த நிலையில், 9 ஆயிரத்து 722 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் மட்டும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் வீட்டு தனிமை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் 5 ஆயிரத்து 969 பேர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 1,659 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 35 படுக்கைகள் காலியாக உள்ளன.
தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் 3 ஆயிரத்து 25 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 2 ஆயிரத்து 45 படுக்கைகள் காலியாக உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 141 படுக்கைகளில் 182 படுக்கைகள் காலியாக உள்ளன. இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரத்து 850 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 823 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.