ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 30 பஸ்கள் இயக்கம்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 30 பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2021-05-23 00:17 GMT
ஈரோடு,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையில் வெளி ஊர்களில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நேற்று மாலை முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு, பள்ளிபாளையம், பவானி, கோபி, அந்தியூர், சத்தி, பெருந்துறை உள்ளிட்ட கிளைகளில் இருந்து நேற்று மாலை 30 அரசு பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

குறிப்பாக மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், நெல்லை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்றன. இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்ட பஸ்களில் 10-க்கும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் டவுன் பஸ்களும் இயக்கப்படும் என்றும், பயணிகளின் கூட்டத்தை பொருத்து வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்