சப்-இன்ஸ்பெக்டர் என கூறி ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் மோசடி -இளம்பெண் கைது

காரைக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-22 23:22 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் வடிவுக்கரசி (வயது 33).இவர் மானகிரியில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். சில மாதங்களுக்கு முன்பு வடிவுக்கரசி சொந்த வேலையாக திருவாடானை சென்று திரும்பினார். அப்போது பஸ்சில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தனது பெயர் தேவசேனா, தென்காசி காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன் என்றும், தற்போது விடுமுறையில் வந்துள்ளேன். எனது சொந்த ஊர் தொண்டி என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
 
அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வது வழக்கம்.ஒரு சில முறை தேவசேனா வடிவுக்கரசியின் வீட்டுக்கும் வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் தேவசேனா வடிவுக்கரசிக்கு போன் செய்து எனது அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ செலவிற்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. கொடுத்து உதவுங்கள். சில நாட்களில் திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.அதனையொட்டி வடிவுக்கரசியும் அவரது கணவரும் இணையதளம் வழியாக ரூ.50 ஆயிரத்தை தேவசேனாவின் வங்கிக்கணக்கிற்கு மாற்றிக் கொடுத்துள்ளனர்.

அதற்கு பிறகு அவரிடமிருந்து போன் வரவில்லை.வடிவுக்கரசி போன் செய்து பேசியபோதும் தேவசேனா சரிவர பேசுவதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வடிவுக்கரசியும் அவரது கணவரும் தேவசேனாவின் தொண்டி முகவரியில் விசாரித்தபோது, தேவசேனா காரைக்குடி கழனி வாசல் பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடிவுக்கரசி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தேவசேனாவை (வயது 20) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்