சேலத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவேக்சின் மருந்து இல்லை என அறிவிப்பு தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றம்
சேலத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவேக்சின் மருந்து இல்லை என அறிவிக்கப்பட்டதால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம்:
கொரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் போதியளவு தடுப்பூசி மருந்து கிடைக்காததால் அதன் பணி பாதிக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் தினமும் சுமார் 1,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி 4 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டு கொண்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு 2-வது டோஸ் போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு கையிருப்பு இல்லாததால் கோவேக்சின் மருந்து இல்லை என்று எழுதி வைத்து அறிவித்துள்ளனர். இதனால் அந்த தடுப்பூசி 2-வது டோஸ் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வருமாறு கூறி அனுப்புகிறார்கள்.