மானியத்தொகை உயர்வால் விலை குறைந்தது: உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து-வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
மானியத்தொகை உயர்வால் உரங்களின் விலை குறைந்தது என்றும், உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
மானியத்தொகை உயர்வால் உரங்களின் விலை குறைந்தது என்றும், உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
உர விற்பனை நிலையங்கள்
சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் 214 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 447 தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் 110 மொத்த விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்த நிலையில், உர உற்பத்திக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி விலையும் அதிகரித்த காரணத்தால் உரங்களின் விலை சுமார் ரூ.700 முதல் ரூ.900 வரை உயர்ந்தது.
இதையடுத்து மத்திய அரசு காரீப் பருவத்திற்கு விவசாயிகளுக்கு பழைய விலையிலேயே உரங்கள் கிடைக்க அவற்றிற்கான மானியத் தொகையை உயர்த்தி உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் டி.ஏ.பி. உரத்தை ரூ.1200-க்கும், காம்ப்ளக்ஸ் உரங்கள் பழைய விலைக்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகள் ஆதார் எண்ணை தெரிவித்து விற்பனை நிலையங்களில் உரங்களை வாங்கி கொள்ளலாம்.
உரிமம் ரத்து
மேலும் அனைத்து விற்பனையாளர்களும் உரங்கள் குறைக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, உரங்கள் தர மறுத்தாலோ சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
விவசாயிகளின் ஆதார் எண்ணை பெற்று நிலப்பரப்பு மற்றும் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப உரங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட தரக்கட்டுப்பாடு பிரிவினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.