சேலம் மாநகராட்சி சார்பில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை சிறப்பு மையங்கள் தொடக்கம்
சேலம் மாநகராட்சி சார்பில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை சிறப்பு மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
சேலம்:
சேலம் மாநகராட்சி சார்பில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை சிறப்பு மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
கொரோனா பரிசோதனை
சேலம் மாநகர பகுதிகளில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் ெகாேரானா பரிசோதனை மேற்கொள்வதற்கு சேலம் புதிய பஸ் நிலையம் அருகிலும், வின்சென்ட் அரசினர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்திலும் டிரைவ் இன் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற சிறப்பு மையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் ஸ்ரீ சவுடேஸ்வரி கல்லூரி வளாகத்திலும் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலத்தில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் அம்மாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
ஆணையாளர் ஆய்வு
இந்த மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 500 பேருக்கு தினந்தோறும் பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சளி, காய்ச்சல், இருமல், உடல்சோர்வு போன்ற நோய் தொற்று அறிகுறியுள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர நல அலுவலர் (பொறுப்பு) செந்தா கிருஷ்ணா, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.