குற்றாலத்தில் முன்கூட்டியே சீசன் தொடங்கியது; குளிக்க அனுமதிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
குற்றாலத்தில் முன்கூட்டியே சீசன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால் குளிக்க அனுமதிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தென்காசி, மே:
குற்றாலத்தில் முன்கூடியே சீசன் நேற்று தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால் குளிக்க அனுமதிக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். அவ்வப்போது வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டும்.
இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளில் மூலிகை குணம் நிறைந்துள்ளதாக கூறுவார்கள். இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடம் குற்றாலம் தான்.
சீசன் தொடக்கம்
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சீசன் நேற்று மாலை தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சீசன் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்தது.
இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுந்தது. ஐந்தருவியில் உள்ள அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. இந்த மழை இன்னும் நீடித்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பாகவே கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் குற்றாலத்திற்கு வர முடியவில்லை. இதேபோன்று தற்போது கொரோனாவின் 2-வது அலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலத்தில் குளிக்க அனுமதி இல்லை. இதனால் 2-வது ஆண்டாக குற்றாலத்தில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.
எனினும் இன்னும் சில நாட்களில் நோய் தொற்று குறைந்து நிலைமை சீரானால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் குற்றாலத்தில் குளிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.