கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமியின் வீட்டுக்கு திடீரென சென்று மாவட்ட வருவாய் அதிகாரி பாராட்டு

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமியின் வீட்டுக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-05-22 20:16 GMT
பேராவூரணி:-

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமியின் வீட்டுக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி பாராட்டு தெரிவித்தார். 

11 வயது சிறுமி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தை சேர்ந்த தம்பதி திருநீலகண்டன்-பாக்கியலட்சுமி. இவர்களின் மகள் சாம்பவி (வயது11) பேராவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். திருநீலகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 
இதையடுத்து அவருடைய மனைவி பாக்கியலட்சுமி தான் பார்த்து வந்த தற்காலிக ஆசிரியை பணியை விட்டுவிட்டு தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சாம்பவி தனது தாயார் மற்றும் உறவினர்கள் அன்பளிப்பாக வழங்கும் தொகையை சேமித்து வைத்து, தனது தந்தையின் நினைவு தினத்தன்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கொரோனா நிவாரண நிதி

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று தான் சேமித்து வைத்திருந்த ரூ.8,300-ஐ நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவை நேரில் சந்தித்து சிறுமி சாம்பவி வழங்கினார்.
இவருடைய தாயார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால், தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக கொடுத்திருந்தார்.

வீட்டுக்கு சென்று பாராட்டு

இந்த நிலையில் தாயை போல மகளும் பிறருக்கு உதவும் சமூக நோக்கத்துடன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியதை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். 
இந்த நிலையில், நேற்று பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய வந்த மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன், சிறுமி சாம்பவியின் வீட்டுக்கு திடீரென சென்று மாணவிக்கு புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

டாக்டராக விருப்பம்

அப்போது அவர் சிறுமியிடம், படித்து என்னவாக வர விருப்பம் என்று கேட்டபோது, சிறுமி ‘டாக்டராக வேண்டும். கொரோனா போன்ற பேரழிவு நோய்களுக்கு எதிராக சேவையாற்ற வேண்டும்’ என தெரிவித்தார். அப்போது தாசில்தார் ஜெயலட்சுமி, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன், டாக்டர் காமேஸ்வரி, பிரசன்ன வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி, சக்திவேல் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்