மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க உத்தரவிட வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு

மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க உத்தரவிட வேண்டும் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2021-05-22 20:10 GMT
கும்பகோணம்:-

மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க உத்தரவிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. 

குறுவை சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை நீரே ஆதாரமாக விளங்குகிறது. ஆற்றுப்பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை நீரை பயன்படுத்துகிறார்கள். 
எனவே குறுவை சாகுபடி பருவத்துக்கு ஏற்றாற்போல ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ள நிலையில், அணையை அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். 
இந்த நிலையில் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்க செயலாளர் விமல்நாதன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 

கருத்து கேட்பு கூட்டம்

நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி செய்வது குறித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது குறித்தும் கடந்த 16-ந் தேதி தஞ்சையில் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் மேட்டூர் அணையை திறக்க கோரிக்கை விடுத்தனர். 
விவசாயிகளின் கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டு தமிழக முதல்-அமைச்சர் முடிவை அறிவிப்பார் என கூட்டத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தமிழக முதல்-அமைச்சர் திருச்சிக்கு வந்தபோது மேட்டூர் அணை திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

விவசாயிகள் ஏமாற்றம்

ஆனால் இது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் போனது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் மழையை பயன்படுத்தி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். 
எனவே நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி அணை திறப்பதை உறுதி செய்து, உடனடியாக உத்தரவிட வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்