திசையன்விளை அருகே ஊரடங்கை மீறியதாக வாலிபர் மீது போலீசார் தாக்குதல்; பொதுமக்கள் போராட்டம்- பரபரப்பு
திசையன்விளை அருகே ஊரடங்கை மீறியதாக வாலிபர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திசையன்விளை, மே:
திசையன்விளை அருகே ஊரடங்கை மீறியதாக வாலிபர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஊரடங்கை மீறியதாக...
நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் நேற்று முன்தினம் இரவில் திசையன்விளை அருகே ஆர்.சி.நந்தன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ஊரடங்கை மீறி, அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் சில வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும் அங்குள்ள காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து தப்பியோட முயன்றனர். அவர்களில் சிலரை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.
அப்போது போலீசாருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சகாய மாத்தூஸ் மகன் கிங்ஸ்லின் (வயது 24) என்பவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவருக்கு ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பொதுமக்கள் போராட்டம்
இதையடுத்து வாலிபரை தாக்கிய போலீசாரைக் கண்டித்து, ஆர்.சி.நந்தன்குளம் கிராமத்தில் நள்ளிரவில் அந்த வாலிபரின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று ஆர்.சி. நந்தன்குளம் கிராமத்துக்கு நேரில் சென்று, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
7 பேர் மீது வழக்கு
இதற்கிடையே, திசையன்விளை போலீஸ் நிலையத்தில் போலீசார் அளித்த புகாரின்பேரில், அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக கிங்ஸ்லின், அவருடைய தம்பி பிரபாகரன் (20), செல்வராஜ் மகன் கெர்ஜின் (21), ஸ்டாலின் மகன் ஞானதனசிங் (23) உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.