நாளை முதல் முழு ஊரடங்கு எதிரொலி; பிற்பகலில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லையில் நேற்று பிற்பகலில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பொருட்களை அள்ளிச் சென்றனர்.
நெல்லை, மே:
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் நேற்று பிற்பகலில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அள்ளிச் சென்றனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் 2-வது கட்ட கொரோனா அலை பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் படிப்படியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஊரடங்கு நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் 1 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் அனைத்து கடைகளையும் அடைத்து கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.
கடைகள் திறப்பு
இதையொட்டி நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை 10 மணியுடன் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. பிற்பகலில் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான கடைகள் நேற்று மாலை திறக்கப்பட்டன.
உடனடியாக பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுத்து வந்தனர். 1 வாரத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிச் சென்றனர். ஜவுளி, நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் இந்த கடைகள் திறக்கப்படுகிறது.
பஸ்கள் இயக்கம்
இதேபோல் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நேற்று மாலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. நெல்லையில் பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் தற்காலிக புதிய பஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வரவில்லை. இருந்த போதிலும் வெளியூர்களில் இருந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன.