கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’

பந்தலூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-05-22 19:04 GMT
பந்தலூர்

பந்தலூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் நேர கட்டுப்பாடுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 

மேலும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்று தாசில்தார் தினேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் உமா, கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

கடைகளுக்கு ‘சீல்’

அப்போது பந்தலூரில் மீன்கடை, உப்பட்டி மற்றும் அய்யன்கொல்லியில் மளிகை கடை என மொத்தம் 3 கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதும், அதற்கு வியாபாரிகள் ஏற்பாடு செய்யாததும் தெரியவந்தது. 

மேலும் வாடிக்கையாளர்கள் கை கழுவ சோப்பு மற்றும் கிருமி நாசினி வைக்கப்படவில்லை. இது தவிர யாரும் முக கவசம் அணியவில்லை.இதையடுத்து அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலித்தனர். இதேபோன்று நேற்று முன்தினம் சேரம்பாடி சுங்கம் பகுதியில் காலை 10 மணிக்கு மேல் திறக்கப்பட்ட மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்