தூத்துக்குடியில் அரசு பஸ்கள் இயக்கம்
தூத்துக்குடியில் அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்த தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் வெளியூரில் இருக்கும் பொதுமக்களின் நலன் கருதி நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று தூத்துக்குடியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், உடன்குடியில் இருந்து தூத்துக்குடி வழியாக சென்னைக்கும், தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் நகர பஸ்களை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இயக்குவதாகவும், இன்று வழக்கம் போல் அனைத்து பஸ்களும் இயங்கும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.