கோவில்பட்டியில் ஊரடங்கால் ஆதரவற்றோருக்கு வாழைப்பழம் வழங்கும் பழக்கடைக்காரர்

கோவில்பட்டியில் ஊரடங்கு காரணமாக ஆதரவற்றோருக்கு ஒரு பழக்கடைக்காரர் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கி வருகிறார்.

Update: 2021-05-22 18:38 GMT
கோவில்பட்டி:
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படுகின்றன. ஓட்டல்களிலும் பார்சல் மட்டுமே குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகிறது. ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் நிலையில், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் உணவின்றி தவிக்கும் துயரமும் உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் ரோடு சந்திப்பு பஸ் நிறுத்தம் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் முத்துபாண்டி என்பவர் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தனது கடையில் வியாபாரம் செய்கிறார். பின்னர் 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு செல்லும்போது, 5 வாழைப்பழத்தார்களை தனது கடையின் முன்பாக தொங்க விட்டு செல்கிறார்.

அதன் அருகில் ஒரு சிலேட்டில், ‘பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும், பழம் இலவசம், வீணாக்க வேண்டாம்’ என்று எழுதி வைத்துள்ளார். இதையடுத்து ஆதரவற்றோர், முதியோர்கள் அவரது கடையின் முன்பு தொங்கவிடப்பட்டு இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு தங்களது பசியாற்றி செல்கிறார்கள். 

மேலும் கடையின் அருகில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர், முதியோர்களுக்கு முத்துபாண்டியின் பழக்கடை பசியை போக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்