கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 112 பேருக்கு கொரோனா பரிசோதனை
கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 112 பேருக்கு கொேரானா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கோவில்பட்டியில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பலரும் தேவையில்லமால் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை ஆய்வாளர் வள்ளிராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர். இவ்வாறு மொத்தம் 112 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதேபோல் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவை இல்லாமல் சுற்றித்திரிந்தவர்களின் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தது மட்டுமின்றி அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.