ஊரடங்கின் போது சுற்றித்திரிந்தவர்களுக்கு பரிசோதனை: 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பெண்ணாடம் போலீசார் அதிர்ச்சி

பெண்ணாடத்தில் ஊரடங்கின் போது சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-22 18:13 GMT
பெண்ணாடம், 

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இதில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்புடன் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்று அரசு அறிவுறித்தியுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் பலர் காரணமின்றி வெளியே சுற்றி வருகிறார்கள்.

கொரோனா பரிசோதனை

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கேட்டால், கடைகளுக்கு செல்வதாக கூறி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கண்முன்னே இருக்கும் ஆபத்தை உணராமல் இவ்வாறாக செயல்படுபவர்களாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஓர் காரணமாகிவிடுகிறது. ஏனெனில் இவ்வாறு சுற்றுபவர்களினால் மட்டும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவே முடியாது.

இந்த நிலையில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதாவது, இதுபோன்று சுற்றுபவர்களை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பிடித்து, அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

5 பேருக்கு தொற்று

இதில் 2 நாட்களுக்கு முன்பு 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதில் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. 

பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஆண், அம்பேத்கர் நகரை சேர்ந்த 2 பெண்கள், சோழன் நகரை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  இதில் கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தலா 2 பேரும், பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சுய கட்டுப்பாடு

காரணமின்றி சுற்றியவர்களில் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே தினசரி பாதிப்பை குறைக்க முடியும். 

அப்போது தான் கொரோனாவின் சங்கிலியை உடைத்து தெரிய முடியும்.
அதேபோல் பெண்ணாடம் போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையை மாவட்டம் முழுவதிலும் செயல்படுத்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்