காட்டுமன்னார்கோவில் பகுதி நீர்நிலைகள் வறண்டதால் கிராமங்களுக்குள் படையெடுக்கும் முதலைகள் மக்கள் அச்சம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் அங்குள்ள முதலைகள் கிராமங்களுக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2021-05-22 18:08 GMT
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி பகுதிகளில் கொள்ளிடக்கரை மற்றும் வடக்கு ராஜன், வடவாறு, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள கரையோர கிராமங்களில் முதலைகளின் நடமாட்டம் இருப்பது வழக்கம்.

தற்போது கோடை காலம் என்பதால் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி  வறண்டு வருவதால், அங்கிருந்து முதலைகள் இறைதேடி கிராமங்களுக்குள் படையெடுக்க தொடங்கி இருக்கிறது.  இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

கரைபகுதியில் கிடந்த முதலை

அந்த வகையில் நேற்று காட்டுமன்னார்கோவில் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்க்கால் கரை பகுதியில் சுமார் 8 அடி நீளமும்,  300 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று கிடந்தது. இதை பார்த்த கிராமத்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, முதலையை பிடித்துவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முதலையை பிடித்து  சிதம்பரத்தில் உள்ள வக்காரமாரி ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

 நேற்று முன்தினம் சிவாயம் பகுதியில் ஒரு முதலை பிடிப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் முதலை ஒன்று பிடிப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வேலி

இந்த பகுதியில் ஒவ்வொரு முறையும் பிடிபடும் முதலைகளை வனத்துறையினர் சிதம்பரம் வக்காரமாரி ஏரியில் கொண்டு விடுகிறார்கள். 
அங்கு பாதுகாப்பு வேலி எதுவும் இல்லாததால், அங்கிருந்து தப்பி மீண்டும் கிராமத்திற்குள் முதலை புகுந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனே இருந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்