கரூர் மாவட்டத்தில் ஒருசில கடைகள் திறப்பு பஸ்கள்- ஆட்டோக்கள் ஓடியது
கரூர் மாவட்டத்தில் ஒருசில கடைகள் திறக்கப்பட்டன. மேலும் வழக்கம்போல் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடியது.
கரூர்
கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் கடந்த 10-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஊரடங்கில் தமிழக அரசால் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் மட்டும் கரூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை திறக்கப்பட்டன. இதர கடைகள் திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.
பொருட்கள் வாங்க குவிந்தனர்
ஊரடங்கில் தினமும், ஓட்டல்களில் பார்சல் உணவு விற்பனை செய்யப்பட்டது. அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கின. அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், பால் வினியோகம், மருத்துவமனைகள் இயங்கின.
பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை போல், இந்த ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கலாம் என்று கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நேற்று மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க குவிந்தனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில் நேற்று மதியம் தமிழக அரசு திடீரென்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், நாளை (திங்கட்கிழமை) காலை முதல் வருகிற 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்றும் அறிவித்தது. முழு ஊரடங்கில் மருந்து கடை, நாட்டு மருந்து கடைகளை தவிர, மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகளை திறக்க அனுமதி கிடையாது. முழு ஊரடங்கில் அந்தப்பகுதிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் முழு ஊரடங்கு நாளை முதல் கடைபிடிக்கப்படுவதால் முன்னதாக நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறந்து வியாபாரம் செய்யவும், 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஒருசில கடைகள் திறப்பு
திடீரென்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பால் கரூர் மாவட்டத்தில் நேற்று குறைவான கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை வியாபாரம் நடைபெற்றது. இதனால் கரூர் ஜவகர்பஜார், கோவைரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தது. பெரும்பாலான நகைக்கடைகள், துணி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்காமல் அடைக்கப்பட்டு இருந்தது. சாலைகளில் குறைந்த அளவிலான ஆட்கள் மட்டுமே நடமாட்டம் இருந்து.
பஸ்கள் ஓடியது
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் இயக்கப்பட்டாலும் அதில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் ஏதும் இயக்கப்பட வில்லை.
மேலும் கரூர் பஸ்நிலையம், லைட்ஹவுஸ் உள்ளிட்ட ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஓரிரு ஆட்டோக்கள் மட்டுமே நின்றிருந்தது. இன்றும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி அனைத்து கடைகளும் திறந்து இருக்கும். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.