கரூரில் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியதை கண்டித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

கரூரில் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியதை கண்டித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-22 17:59 GMT
கரூர்
வாகன சோதனை
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவு கரூர் திருமாநிலையூர் அமராவதி பாலம் அருகே சோதனை சாவடியில் பசுபதிபாளையம் போலீஸ் ஏட்டு சரவணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் இ-பதிவு பெற்ற வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. தேவையில்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.  
போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிலர் கண் இமைக்கும் நேரத்தில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து திடீரென போலீசார் மீது வீசியுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் நிரப்பிய பாட்டில் போலீசார் மீது படாமல் கீழே விழுந்து வெடித்துள்ளது. இதனை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
இதில், போலீசார் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து போலீசார் அந்த மர்மநபர்களை துரத்தி சென்றனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.
சிறுவன் உள்பட 3 பேர் கைது
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கரூர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 22), கதிரேசன் (21), ஜெயக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றி வந்துள்ளனர். அவர்களை போலீசார் கண்டித்து இனிமேல் தேவையின்றி வெளியே சுற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து போலீசார் மீது திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. 
இதையடுத்து ராமமூர்த்தி, கதிரேசன், 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஜெயக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்